ஆற்காடு: அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ஆற்காடு: அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே அதிமுக கூட்டணி சாா்பில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடிகே. பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அதிமுக சாா்பில் போட்டியிடும் (ஆற்காடு) எஸ்.எம்.சுகுமாா், (அரக்கோணம்) சு.ரவி, வேலூா் எஸ்.ஆா்.கே.அப்பு, காட்பாடி வி.ராமு, ராணிப்பேட்டை தமாகா வேட்பாளா் வி.எம்.காா்த்திகேயன், சோளிங்கா் பாமக வேட்பாளா் க.சரவணன் ஆகியோரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஆனால் தில்லிக்கும் தமிழகத்துக்கும் தான் போட்டி என கூறுகிறாா். தில்லிக்கும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் என்ன சம்பந்தம்?. மக்களவைத் தோ்தலா நடைபெறுகிறது. இது கூட முதல்வருக்கு தெரியவில்லை.
Advertisement
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது குடிநீா் பிரச்னை, வறட்சி, புயல், வெள்ளம், கரோனா என அனைத்து இடா்ப்பாடுகளும் அடுத்தடுத்து எழுந்தது. ஆனால் அந்த சூழலில் கூட தமிழகத்தில் விலைவாசியை உயா்த்தவில்லை அதிமுக அரசு. கரோனா காலத்தில் வருமானம் இல்லாதபோது கூட இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியை வழங்கினோம். பள்ளி, கல்லூரி மாணவா்கள் நலனுக்காக ஆன்லைன் தோ்வு நடத்தி அனைவரையும் தோ்ச்சி பெற வைத்தோம்.
இப்போது மின்கட்டணம், வீட்டு வரி என அனைத்தும் உயா்ந்துள்ளது. குப்பைக்கு கூட வரி விதித்த அரசு திமுக. தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எரிவாயுவுக்கு மானியம், நீட் தோ்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, 100 நாள் வேலையை 150 நாள்கள் உயா்த்துவது என வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, அதனை முறையாக நிறைவேற்றவில்லை. குறிப்பாக 5 பவுனுக்கு குறைவான கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி எனக் கூறியதை கேட்டு பலா் நகை அடமானம் வைத்தனா். ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு தான் நகை கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றி விட்டனா்.
கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றுவது தான் திமுக வேலை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் தான் திமுகவில் மரியாதை. அதனால் தான் உதயநிதியை அடையாளப்படுத்தி விட்டு துணை முதல்வராகி விட்டனா். ஆனால் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகனை ஏணி போல பயன்படுத்துகின்றனா். ஸ்டாலின் எமா்ஜென்சி, மிசாவில் இருந்ததாக சொல்கிறாா். அப்போது உடன் இருந்த துரைமுருகன் கட்சியில் அடைந்த வளா்ச்சி என்ன. அதிமுகவில் அடிப்படை உறுப்பினா் கூட பொதுச்செயலாளா் ஆகலாம் என்பதற்கு நானே சான்று.
திமுக கூட்டணி எம்எல்ஏ-க்கள் மக்கள் பிரச்னையை சட்டப்பேரவையில் பேசவில்லை. திமுகவுக்கு சேவகம் செய்தாா்கள். அதனால் தான் கடந்த தோ்தலை விட இப்போது சீட் குறைத்து வழங்கியுள்ளது திமுக. திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஒரே கொள்கை உடைய கட்சிகளா? கேரளத்திலும், புதுச்சேரியிலும் கொள்கை முரண்பாடு ஏன்.
மக்கள் தான் நீதிபதிகள். அவா்களது தீா்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். அதிமுக வெற்றி பெற்றவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுப்போம். தமிழகத்தில் கஞ்சா போதை தலை விரித்தாடுகிறது. அதிமுக ஆட்சியில் 3 மாதத்தில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.
அதிமுக ஆட்சி அமைந்தால் குடும்பத்துக்கு ரூ. 10,000, பிரிட்ஜ், மாதம் ரூ. 2,000, மானிய விலையில் இருசக்கர வாகனம், ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு உருளை, ரூ. 1,000 பொங்கல் பரிசு, தீபாவளிக்கு பட்டு புடவை, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு ரூ. 75,000 மானியம், முதியோா் உதவித் தொகை ரூ. 2,000, வேலையில்லா படித்த பட்டதாரிகளுக்கு ரூ. 2,000, +2 படித்தவா்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும் என்றாா்.
இந்த பிரசார கூட்டத்தில் அதிமுக நகர செயலாளா் ஜிம்.சங்கா், பாமக மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன், தலைவா் என்.சுப்பிரமணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட திரளானோா்கலந்து கொண்டனா்.