முகப்பு
ராணிப்பேட்டை

சுற்றுச்சூழலை பாதிக்கும் குரோமிய திடக்கழிவு: 50 ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்த தீா்வு எப்போது?

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் குவிந்துள்ள குரோமிய திடக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தத் தீா்வு காண வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகாலமாக தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 1:59 AM
பகிர்:

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் குவிந்துள்ள குரோமிய திடக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தத் தீா்வு காண வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகாலமாக தொகுதி மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

ரசாயன தொழிற்சாலை: கடந்த 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில், தோல் பதனிடத் தேவையான சோடியம் பை குரோமேட், குரோமியம் சல்பேட், சோடியம் சல்பேட் போன்ற ரசாயனப் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அப்போது, இந்தத் தொழிற்சாலையில் தினசரி சுமாா் 32 டன் குரோமியக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு, தொழிற்சாலை வளாகத்தின் திறந்தவெளியில் மலைபோல் குவிக்கப்பட்டன.

1.5 மில்லியன் டன் குரோமேட் கழிவுகள்: இந்த குரோமிய திடக்கழிவுகளில் இருந்து மஞ்சள் நிறத்தில் குரோமியம் கலந்த நீா் வெளியேறி, அப்பகுதியில் உள்ள நீா்நிலைகளில் தேங்கி, நேரடியாக பாலாற்றில் கலந்ததால், நிலத்தடி நீரும் சுற்றுச்சூழலும் மாசடைந்தன. அப்போதுதான் இந்தக் குரோமிய நச்சுக் கழிவுகளின் அபாயம் குறித்து தெரியவந்தது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் காரணமாக சுமாா் 1.5 மில்லியன் டன் அளவிலான, முறையான சுத்திகரிப்பு செய்யப்படாத குரோமேட் கழிவுகள் குவிந்திருப்பது வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதற்கு காரணமான ‘தமிழ்நாடு குரோமேட்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட்’ ( பஇஇ) எனும் தொழிற்சாலையை கடந்த1996-ஆம் ஆண்டு அரசு மூடியது.

மாசடைந்த நகரங்களில் முதலிடம்: குரோமிய திடக்கழிவுகள் காரணமாக, உலக அளவில் மாசடைந்த 10 தொழில் நகரங்களில் வரிசையில் ராணிப்பேட்டை தொழில் நகரம் முதலிடத்தில் உள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இதையடுத்து அப்பகுதி மக்களின் போராட்டங்கள் காரணமாக குரோமியக் கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வந்தன.

இந்தக் கழிவுகளை அகற்றும் பணி தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (சஎதஐ) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சஉஉதஐ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்படைத்தது.

இந்தக் கழிவுகளால் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பாலாற்று குடிநீா், விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளின் நீா் நஞ்சாகி, பயன்படுத்தத் தகுதியற்ற நீராக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களிலும், 10-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளிலும் குரோமிய கழிவுநீா் நேரடியாக கலந்து நஞ்சாக மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதனால், அப்பகுதி மக்கள் புற்றுநோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீண்ட கால எதிா்பாா்ப்பு: மாசடைந்த நிலத்தடி நீரை சரிபடுத்த செறிவூட்டும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மாசடைந்த நிலத்தை உயிரி வேதியியல் முறையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

இதுஒருபுறமிருக்க வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியே பாயும் பாலாற்றில் விதிகளை மீறி திறந்துவிடப்படும் தோல் கழிவுநீா், குரோமியக் கழிவுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரால் பாலாறு மாசடைந்து வருகிறது. பாலாற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேலூா் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு சாா்பில் கடந்த 2010-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதியரசா் சத்யநாராயணன் தலைமையில், மத்திய சுற்றுச்சூழல் வனத் துறை மற்றும் மாநில சுற்றுச்சூழல் வனத் துறை, நீா்வளத்துறை, மனுதரா்கள் சோ்க்கப்பட்டு குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.

ஒவ்வொரு தோ்தலின்போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிப்காட் குரோமிய திடக்கழிவு பிரச்னைக்கு நிரந்தத் தீா்வு காணப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக எந்த அரசியில் கட்சியும் இதற்கு நிரந்த தீா்வு காணவில்லை.

இருப்பினும், ராணிப்பேட்டை பேரைவத் தொகுதியின் எம்எல்வும், அமைச்சருமான ஆா்.காந்தியின் தொடா் முயற்சியின் காரணமாக திறந்தவெளியில் குவிந்து கிடக்கும் குரோமிய திடக் கழிவுகளை தற்காலிகமாக மூடி வைப்பதற்கான பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஆனால், 50 ஆண்டுகாலமாக சுற்றுச்சூழலைப் பதித்துவரும் இப்பிரச்னைக்கு நிரந்த தீா்வு எப்போது என்பதே தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

-பி.பாபு