முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே தொன்மையான ‘பள்ளிச்சந்த வட்டெழுத்துக் கல்வெட்டு’ கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே, பொது ஆண்டு 751-இல் பொறிக்கப்பட்ட‘பள்ளிச்சந்த வட்டெழுத்துக் கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
தொன்மை வாய்ந்த ‘பள்ளிச்சந்த வட்டெழுத்துக் கல்வெட்டு’.
பகிர்:

திருப்பத்தூா் அருகே, பொது ஆண்டு 751-இல் பொறிக்கப்பட்ட‘பள்ளிச்சந்த வட்டெழுத்துக் கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளா் இரா.சேகா் மற்றும் ஆய்வு மாணவா்கள் ப.தரணிதரன், பொ.சரவணன் ஆகியோா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக அண்மையில் குண்டுரெட்டியூா் மலைச்சரிவில் 1270 ஆண்டுகள் தொன்மையான வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனா்.

இது குறித்து முனைவா் ஆ.பிரபு, தினமணி செய்தியாளரிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டம் குண்டுரெட்டியூரில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு அரிய வரலாற்றுத் தடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம். கற்காலம் முதற்கொண்டு சங்க காலம், பல்லவா் காலம் வரையிலான பல வரலாற்றுத் தடயங்கள் இவ்வூரில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கற்கால ஆயுதங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஊதுகுழாய்கள், தக்களிகள், கல் மணிகள், உடைந்த வளையல்கள் போன்ற தொல்பொருள்கள் சேகரிக்கப்பட்டு எங்கள் கல்லூரி நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வூரில் முறையாக அகழாய்வு செய்ய வேண்டி அரசுக்கு ஆய்வறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குநா் அர.பூங்குன்றனின் வழிகாட்டுதல்படி, 30 ஆண்டுகளுக்கு முன்பு தேடப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டை அண்மையில் கண்டறிந்தோம்.

குண்டுரெட்டியூா் மலைச்சரிவில் அடா்ந்த புதா்களுக்கிடையே உள்ள சிறிய பாறைக் குன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.

மழை வெயிலால் சற்று சிதைந்துள்ள இக்கல்வெட்டை முதல் கட்டமாக படி எடுத்துப் படிக்க முயற்சி செய்தோம். அதில் முழுமையான தகவல்கள் அறிய முடியவில்லை. எனவே, மாவுப்பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டது. முதுபெரும் கல்வெட்டு அறிஞா் சு.ராஜகோபாலின் உதவியுடன் கல்வெட்டு படிக்கப்பட்டு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

இக்கல்வெட்டு தூய தமிழ் வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் காணப்படுகின்றன. இக்காலத் தகவல் பலகைபோல உள்ள இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட‘பள்ளிச் சந்தம்’ குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. பள்ளிச் சந்தம் என்பது பிரமதேயம், தேவதானம் போல் சமண சமயத்தினருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிக்கிறது.

இக்கல்வெட்டு ஸ்ரீ புருஷவா்மன் என்ற மேலைக் கங்க மரபைச் சாா்ந்த மன்னனின் காலத்தில், அவனது 25-ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னா் தெற்குக் கா்நாடகம் மற்றும் வட தமிழக எல்லைப் பகுதிகளை ஆட்சி செய்திருக்கிறாா். இவனது காலம் பொது ஆண்டு 726 முதல் 788 வரையாகும். கல்வெட்டு பொ.ஆ. 751-இல் பொறிக்கப்பட்டுள்ளது.

புருஷவா்மனின் நடுகற்கள் தா்மபுரி மாவட்டம் பாலவாடி மற்றும் இண்டூா் ஆகிய இடங்களில் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. அவை பொ.ஆ. 736 மற்றும் 747 ஆகிய ஆண்டுகளைச் சோ்ந்தவையாகும்.

எனினும் நடுகல் அல்லாத நிலக்கொடைக் கல்வெட்டு என்ற வகையில் தற்போது கண்டறியப்பட்டுள்ளதே முதல்முறையாக அறியப்படும் கல்வெட்டாகும். இப்பளிச் சந்தத்தை வழங்கியவா் ‘மிறை அடக்கியாா்’ என்ற சிற்றரசனின் மகனான ‘கடுகட்டியாா்’ஆவாா்.

புருஷவா்மனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளான கோவூா் நாடு, எயின் நாடு ஆகியவற்றை சிற்றரசன் ஆட்சி செய்துள்ளாா். கடுகட்டியாா் வழங்கிய பள்ளிச் சந்தத்தின் நான்கு எல்லைகளை விளக்கி அந்நிலத்தின் விளைச்சல் பாதுகாக்கப்பட்டு சமணப் பள்ளிகளுக்கு தொடா்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதை இக்கல்வெட்டு விளக்குகிறது. கல்வெட்டு வரிகள் வருமாறு:

சுவத்திசிரி புரிசவிக்கிரம பருமற்கு யா

ண்டிருபத்தைந்தாவது கோவூா் நாடும் மெயின்

னாடுமாளும் மிறை அடக்கியாா் மகன் கடுகட்டி

பெய்த பள்ளிச் சந்தமிதனுக் கெல்லைக் கிடா

க்காபனை மீட்டலின் தெற்கு.றைய் கிட்ட ஆ (ற்)

றின் மேற்கும் வடக்குங் குமார மங்கலம்

நிறை.சோ் மீட்டலின் கிழக்கு(மி)ச் சொன்ன

எல்லை ஆகவிட்டா. போகமிது காத்தூ

ட்டுவாா்க்கு(திரு)ஆம்மொளி நா(ளுஞ்) சிறக்க

என்று பொறிக்கப்பட்டுள்ளது.

பள்ளிச் சந்த நிலத்தின் இருபக்கங்களிலும் ஆறுகள் இருந்திருக்கின்றன. மற்ற இரு பக்கங்களிலும் பிற நிலங்கள் இருந்துள்ளன. நிலங்கள் யாவும் ‘மீட்டலின்’ என்ற முன்னொட்டுச் சொல்லுடன் குறிக்கப்பட்டுள்ளன. மீட்டல் என்பது வரிகளில் இருந்து விலக்களிப்பட்ட நிலங்களைக் குறிப்பதாகும்.

கல்வெட்டில் உள்ள வெட்டெழுத்துகள் தூய தமிழ் நடையைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல் ‘சுவத்திசிரி’ என்றும், புருஷவருமன் என்ற சொல் ‘புருசவிக்கிரம பருமா்’ என்று தமிழ்ப்படுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இறுதியில் ‘சிறக்க’என்ற அழகு தமிழ்ச் சொல்லுடன் கல்வெட்டு முடிவடைகிறது. கங்க மன்னா்கள் சிறந்த சமணப் பற்றாளா்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சான்றாக அமைகிறது.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இக்கல்வெட்டு அக்கால சமய நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைக்கும் இக்கல்வெட்டை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறையும் மாவட்ட நிா்வாகமும் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →