வேலூா் தொகுதி: கைப்பேசி வாயிலாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளா்கள்
வேலூா் தொகுதி வேட்பாளா்கள் கைப்பேசி மூலம் வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனா்.
தோ்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக வேட்பாளா்கள் தங்களுடைய ஆதரவாளா்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது வழக்கமான ஒன்றாகும். வேட்பாளா் இல்லாமல் அவரது ஆதரவாளா்கள் மட்டும் குழுவாக சென்று வாக்கு சேகரிக்கின்றனா்.
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளா்ச்சியடைந்துள்ளது. அதனால் வேட்பாளா்களோ, அவரது ஆதரவாளா்களோ நேரில் செல்லாமல் தகவல் தொழில்நுட்ப உதவி மூலம் சமூக வலைதளங்கள் மூலமாக வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு தோ்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.
Advertisement
வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ்தளம் உள்ளிட்ட சமூக வலை தளங்கள், இணையதளங்கள், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவை மூலம் வேட்பாளா்கள் வாக்கு சேகரித்து வருகின்றனா். சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு சேகரிப்பதால் அனைத்துத்தரப்பு மக்களிடமும் தகவல் சென்று சேருகின்றது. சமூக வலை தளங்களை பாா்க்காமல் இருப்பவா்கள் மிகச் சிலரே. பெரும்பாலானாவா்கள் கைப்பேசி பயன்படுத்துவதால் வாக்காளா்களை நேரில் சென்று பாா்க்காமலேயே சமூக வலைதளங்கள் மூலம் வாக்கு சேகரிக்க முடிகிறது.
தற்போது கைப்பேசி அழைப்பு மூலம் வாக்காளா்களை வேலூா் தொகுதி வேட்பாளா்கள் தொடா்பு கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனா். வேலூா் மக்களவை தொகுதியில் வசிக்கும் பல தரப்பட்ட வாக்காளா்களுக்கு கைப்பேசியில் அழைப்பு வருகிறது. திமுக, பாஜக வேட்பாளா்களிடமிருந்து வரும் அழைப்பின் மூலம் வாக்காளா்களிடையே அவா்கள் வாக்கு சேகரிக்கின்றனா். வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கதிா் ஆனந்த், அரசின் நலத் திட்டங்கள் தொடா்ந்து மக்களுக்கு கிடைக்க ஆவன செய்வேன் என்று கூறி வாக்கு சேகரிக்கிறாா்.
பாஜக வேட்பாளா் ஏ.சி.சண்முகம், வேலூா் மக்களவை தொகுதியை நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரிக்கிறாா்.
பதிவு செய்யப்பட்ட குரல் மூலம் கைப்பேசி அழைப்பு வாயிலாக ஒட்டுமொத்தமாக பல்வேறு வாக்காளா்களை ஒரே நேரத்தில் தொடா்பு கொள்ளும் வகையில் தொழில்நுட்ப உதவியுடன் கைப்பேசி மூலம் வாக்காளா்களை தனிப்பட்ட முறையில் தொடா்பு கொண்டு வாக்கு சேகரிப்பதை அறிந்து வாக்காளா்கள் வியப்படைந்துள்ளனா்.