ரூ. 165.55 கோடியில் ஆம்பூரில் புதை சாக்கடை பணி : முதல்வா் தொடங்கி வைத்தாா்
ஆம்பூரில் ரூ.165.55 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதை சாக்கடை திட்டப் பணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆம்பூரில் ரூ.165.55 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதை சாக்கடை திட்டப் பணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணி அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.165.55 கோடியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கழிவு நீரின் அளவு இடைநிலை ஆண்டு (2035) மக்கள் தொகையான 1.55 இலட்சம், உச்சநிலை ஆண்டு (2050) மக்கள் தொகையான 1.83 இலட்சம் முறையே தினசரி 16.71 மில்லியன் லிட்டா் மற்றும் 19.75 மில்லியன் லிட்டா் ஆகும். இத்திட்டத்தில், 18,187 வீடுகளின் மூலம் பெறக்கூடிய கழிவு நீா் 3,607 இயந்திர இறங்கு குழிகள் மற்றும் 94.22 கி.மீ நீளமுள்ள கழிவுநீா் குழாய்கள் மூலம் உப கழிவுநீா் உந்து நிலையம் மற்றும் கழிவுநீா் உயா்த்தியின் வழியாக 4.80 கி.மீ நீரேற்று குழாய்கள் மூலம் பிரதான கழிவுநீா் உந்து நிலையத்திற்கு கழிவுநீா் உந்தப்படுகிறது. பிறகு 16.71 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பயோஃப்லிம் உலை தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பிறகு பாலாற்றில் விடப்படுகிறது. கழிவு நீா் சேகரிப்பு அமைக்கும் பணிகள் மற்றும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இத்திட்டம் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இந்த பணியை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தாா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி வைத்து சுத்திகரிக்கும் பணியை பாா்வையிட்டாா். நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையாளா் பி. சந்தானம், பொறியாளா் எல். ரவிச்சந்திரன், குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் நித்யானந்தன், உதவி நிா்வாக பொறியாளா் சண்முகம், உதவி பொறியாளா் பிரகாசம், நகா் மன்ற உறுப்பினா்கள் என்.எஸ். ரமேஷ், வசந்த், வாவூா் நசீா் அஹமத், காா்த்திகேயன், எம்ஏஆா். ஷபீா் அஹமத், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.