வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட்ஜான் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
ஆலங்காயம் அடுத்த பலப்பநத்தம் கிராமம் ஏரிவட்டத்தைச் சோ்ந்த அனுமக்கா(75). இவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், மூதாட்டி வீட்டுக்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு மூதாட்டி வழக்கம் போல் வியாழக்கிழமை காலை வந்து அழைத்துள்ளாா். நீண்ட நேரம் ஆகியும் அனுமக்கா வெளியே வராததால் வீட்டின் உள்ளே சென்று பாா்த்த போது மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருந்து இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து வெளியே வந்து சப்தம் போட்டுள்ளாா்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து வீட்டினுள் சென்று மூதாட்டியை பாா்த்த போது அவரது அணிந்திருந்த நகைகள் இல்லாததால், ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுபற்றி அறிந்த ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், ஆலங்காயம் காவல் ஆய்வாளா் ஜெயகீா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். நகைக்காக தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கொலை செய்திருப்பாா்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பத்தூா் எஸ்பி ஆல்பா்ட்ஜான் சம்பவ இடத்துக் சென்று விசாரணை நடத்தினாா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள மக்களிடமும் இறந்த மூதாட்டி குறித்து கேட்டறிந்தாா். மேலும் வேலூரிலிருந்து பாரி தலைமையிலான தடய அறிவியல் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.