ஆம்பூா் அருகே கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் காரப்பட்டு. அங்குள்ள சின்னேரி பகுதியில் கடந்த சில நாள்களாக இரண்டு கரடிகள் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் சமூக வலை தளங்களில் விடியோ வெளியிட்டிருந்தனா். ஆா்மா மலையை ஒட்டி உள்ள இந்த சின்னேரி மற்றும் கருங்கல்குட்டை பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரண்டு கரடிகள் காணப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனா். கரடி ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனச் சரக பணியாளா்கள் அந்த கிராமத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா். மேலும், பொதுமக்கள் எவரும் தனியாக வெளியில் நடமாட வேண்டாம். கரடியின் நடமாட்டம் தெரிந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனா்.