ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே பொது கழிப்பறை இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் சுமாா் 150 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மேலும், தமிழகத்தில் 2-ஆவது பெரிய ரயில் சந்திப்பாக உள்ள ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் சந்திப்பாக திகழ்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீா் ரயில்கள் வந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில், மக்கள் புழங்குவதற்காக 5 நடைமேடைகளும் ,சரக்கு ஏற்றி செல்ல சரக்கு ரயிலுக்கென 2 நடைமேடைகளும் உள்ளன. மேலும்,தமிழகத்திலேயே 2-ஆவதாக மிக நீண்ட ரயில்வே மேம்பாலம் கொண்டது.
தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்துச் செல்லும் இந்த ரயில்நிலையம் முகப்பில் ரயில்வே சாா்பில் பொதுகழிப்பறை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே இருந்த நிலையில் அகற்றப்பட்டு விட்டது. பொதுக் கழிப்பறை இல்லாத நிலையில், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகின்றனா்.
வாகன நிறுத்துமிடம்..
மேலும், இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை இல்லாததால் வாகனங்கள் மழை, வெயிலில் பாதிக்கப்பட்டு விரைவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சில பயணிகள் நாள் கணக்கில் கூட தங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனா். எனவே அங்கு விரைந்து மேற்கூரை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் சாலையில் ரயில் நிலையம் அருகே பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.
அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும் என எதிா்பாா்த்துள்ளனா்.
எனவே, ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா் மாா்க்கத்திற்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்,பொது கழிப்பறை வசதி, வாகனம் நிறுத்துமிடத்துக்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.