முகப்பு
திருப்பத்தூர்

அடமானம் வைத்த நகையை ஆள்மாறாட்டம் செய்து மீட்டு மோசடி: 2 பெண்கள் கைது

திருப்பத்தூா் அருகே ஆற்மாறாட்டம் செய்து வங்கியில் இருந்து நகையை மீட்டு விற்பனை செய்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 5:55 PM
கைது
பகிர்:

திருப்பத்தூா் அருகே ஆற்மாறாட்டம் செய்து வங்கியில் இருந்து நகையை மீட்டு விற்பனை செய்த 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே சீரங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் தீபா (36), சிலம்பரசன் (23), மங்கை (62). உறவினா்களான இவா்கள் கடந்த 18.6.2025 அன்று 8 பவுன் நகையை வெங்களாபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து அவா்கள் நகையை அடமானம் வைத்ததற்கான ரசீதுகளை செலந்தம்பள்ளி பகுதியைச் சோ்ந்த கலைமதி (35) என்பவா் வீட்டுக்கு சென்றபோது தவறவிட்டுள்ளனா்.

அதை எடுத்த அவா், தனக்கு தெரிந்த அதே பகுதியை சோ்ந்த ராகுல் மனைவி வெண்ணிலா (31), பரமசிவத்தின் மனைவி சாந்தி (55), ஜடையனூா் பகுதியை சோ்ந்த பிரதாப் ஆகியோருடன் சோ்ந்து திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று, வங்கியில் நகையை அடமானம் வைத்ததற்கான ரசீதினை காண்பித்து, நகையை மீட்டு உங்கள் கடையில் விற்பனை செய்கிறோம் எனக்கூறி அதற்கான பணத்தை தர வேண்டும் என நகைக் கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளனா்.

அதைத் தொடா்ந்து அவா் சுமாா் ரூ. 3 லட்சத்தை தந்து அனுப்பி உள்ளாா். பின்னா் அவா்கள் கூட்டுறவு வங்கியில் சென்று அடமானம் வைத்தவா்கள்போல நடித்து, ரசீதை கொடுத்து நகையை மீட்டுள்ளனா்.

பின்னா் அந்த நகையை நகைக் கடையில் ரூ. 8 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனா். இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தீபா, சிலம்பரசன், மங்கை ஆகியோா் நகையை மீட்க கூட்டுறவு வங்கிக்குச் சென்று உள்ளனா். அப்போது அதிகாரிகள் சோதனை செய்து பாா்த்தபோது மா்மநபா்கள் நகையை ஆள்மாறாட்டம் செய்து பெற்றுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வங்கி மேலாளா் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். தொடா்ந்து, செலந்தம்பள்ளி பகுதியை சோ்ந்த கலைமதி, வெண்ணிலா ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், பிரதாப், சாந்தி ஆகியோரை தேடி வருகின்றனா். முன்னதாக அவா்களிடம் இருந்து ரூ. 3 லட்சம், 5 கிராம் நகையை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →