நாட்டறம்பள்ளி அருகே லாரியில் மண் கடத்திச் சென்றபோது லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம், குனிச்சியூா் செட்டேரிஅணை, சிவாங்குட்டை உள்பட பல இடங்களில் இருந்து இரவு நேரங்களில் மண் கடத்தல்காரா்கள் லாரிகளில் மண் கடத்திச் சென்று செங்கல் சூளை, கட்டடப் பணிகளுக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வெலகல்நத்தம் பகுதியில் இருந்து அனுமதி இல்லாமல் மண் அள்ளிச் சென்ற லாரி பையனப்பள்ளி கூட்டு சாலை அருகே சென்ற போது, அவ்வழியாகச் சென்ற பைக் மீது மோதி விட்டு சாலையோரம் உள்ள இரும்பு தடுப்புச் சுவா் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், பைக்கில் வந்த 2 பேரில் கிட்டப்பையனூா் பூம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஆறுமுகம் என்பவரின் மகன் சுரேஷ் (38) சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். மற்றொருவா் கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தபால்மேடு பகுதியைச்சோ்ந்த ராஜேஷ் (58) பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு நாட்டறம்பள்ளிஅரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராஜேஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.