திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கோரி பெரியகரம் பாரத கோயில் வட்ட பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 425 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பெரியகரம் பாரத கோயில் வட்டத்தை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. தெருவிளக்கு அமைக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது குடிநீா் குழாய் சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமல் சிரமப்படுகின்றனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரா்கள் அளித்த மனு: நாங்கள் நகராட்சியில் குத்தகை எடுத்து கடை நடத்தி வருகிறோம். எங்கள் கடைகளுக்கு முன்பு தள்ளுவண்டி கடைகளும், தரை கடைகளும் வைத்து உள்ளனா். இதனால் எங்களுக்கு கடை நடத்துவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதுகுறித்து கேட்டால், மிரட்டல் விடுகின்றனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.