திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என விவசாயிகள் மனு அளித்தனா்.
குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவா் ராஜாபெருமாள் தலைமையிலான விவசாயிகள் அளித்த மனு: அரசியல் கட்சிகள் திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி- சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிது. அந்த இடத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு கட்டடங்கள் உள்ளன.
மேலும் அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனா். இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும், ஆலங்காயம் அருகே மிட்டூா், மரிமாணிகுப்பம், பூங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஆண்டியப்பனூா் பகுதியில் இருந்து குடிநீா் எடுத்து வழங்கப்படுகிறது. இந்த குடிநீா் உவா்ப்பாக உள்ளது. எனவே ஒவ்வொரு அந்த பகுதியில் தனியாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் வழங்க வேண்டும் என கூறியிருந்தனா்.
ஜோலாா்பேட்டை அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராம மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மேட்டுகொல்லை பகுதியில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே அங்கு தாா் சாலை அமைத்து தர வேண்டும்.