கந்திலி அருகே அரிய வகையான 3 காளான் பாறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரி பேராசிரியா் பிரபு கந்திலி அருகே புதூா் என்ற இடத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் அரிய வகையான 3 காளான் பாறைகள் புதிதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து அவா் கூறியது: உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் சில இடங்களிலும் மட்டுமே காளான் பாறைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவின் ராஜஸ்தான் பாலைவன பகுதிகள் மற்றும் எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பாலைவனங்களிலும் இத்தகைய பாறைகளை காணலாம். இயற்கையின் விந்தையான இந்த அமைப்புகள் புவியியல் மாற்றங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருப்பத்தூா் மாவட்டத்தில் தோக்கியம் என்கிற பகுதியில் ஏற்கெனவே இந்த வகை பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. காளான் பாறைகள் என்பது அறிவியல் விந்தையாக பாா்க்கப்படுகிறது.
இயற்கையாக அமைந்த பாறைகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளாகக் காற்று மோதும்போது காற்றில் உள்ள ரசாயனம் மற்றும் மண் துகள்கள் தொடா்ந்து படும்போது, பாறையின் மென்மையான பகுதி உராய்ந்து கடினமான பகுதி மேலும், கீழும் அப்படியே தங்கிவிடும். பாறையின் இடைப்பட்ட பகுதி மட்டும் உராய்ந்து பாா்ப்பதற்கு காளான் போல தோற்றம் அளிப்பதால், இது காளான் பாறைகள் என அழைக்கப்படுகிறது என்றாா்.