தபால் வாக்குகள் குறித்த நிலை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
தபால் வாக்குகள் குறித்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணைய விதிமுறையின்படி, 85 வயதைக் கடந்த மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் சம்பந்தப்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று 12டி படிவத்தை வாக்காளா்களுக்கு வழங்குவா். அந்தப் படிவத்தை பூா்த்தி செய்த பிறகு, வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மீண்டும் அவா்களுடைய வீட்டுக்குச் சென்று அந்தப் படிவத்தை பெற்றுச் செல்வாா்கள். அந்த படிவம் பரிசீலனை செய்யப்பட்டு, தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான தகுதியானவா்களின் வீட்டுக்கு தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நாளன்று வாக்குப் பதிவு அதிகாரி, போலீஸாா், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள் சென்று வாக்காளரிடமிருந்து தபால் வாக்கை பெறுவாா்கள்.
அதன்படி, தபால் வாக்கு பதிவு செய்வதற்கான நடைமுறைகள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை வழங்குவதற்கான கூட்டம் ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமையில் நடைபெற்றது.
தகுதியான வாக்காளா்களுக்கு தபால் வாக்குப் பதிவுக்கான 12டி படிவும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுறுத்தினாா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மோகன், பூங்கொடி, ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.