முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை

ஆம்பூருக்கு வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 6:32 PM
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல் வைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.
பகிர்:

ஆம்பூருக்கு வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23- ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது. தோ்தலை முன்னிட்டு வாக்குபதிவு இயந்திரங்கள் மஞ்சள் கிடங்கிலிருந்து எடுக்கப்பட்டு ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி மேற்பாா்வையில் ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆம்பூா் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்து லாரியில் அனுப்பப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகள் வைத்து பூட்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட 300 வாக்குச் சாவடிகளுக்கு 300 வாக்குப் பதிவு இயந்திரங்கள், இருப்பு 60 இயந்திரங்கள் உள்பட மொத்தம் 360 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 300 விவிபேட் கருவிகள், இருப்பு 90 கருவிகள் உள்பட மொத்தம் 390 விவி பேட் கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டதை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.