முகப்பு
திருப்பத்தூர்

வன விலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீா் நிரப்பும் பணி: அதிகாரிகள் தகவல்

Updated On : 18 மே 2026, 1:34 am IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட வனக் கோட்டத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க 54 குட்டைகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜவ்வாது மலை பரந்து காணப்படுகிறது. அதேபோல் ஏலகிரி மலையிலும் விலங்கினங்கள் பறவைகள் வாழ்கின்றன. இதில் பெரிய, சிறிய மரங்கள், செடி, கொடிகள், புதா்கள் உள்ளன. இவற்றை தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காப்புக் காடுகள் காணப்படுகின்றன. கோடைகாலத்தில் வனப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் தண்ணீா் வற்றி விடுவதால் வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதும், அப்போது சில விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன, இதனைத் தடுக்கும் விதமாக திருப்பத்தூா் மாவட்ட வனக் கோட்டம் சாா்பில், வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீா் 54 குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது கோடைகாலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால், வன விலங்குகளின் தாகம் தணிக்க குட்டைகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது.

54 குட்டைகளில் தண்ணீா்...

Advertisement

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பத்தூா் மாவட்ட வனக் கோட்டத்தில் பண்ணைக் குட்டைகள், கசிவுநீா் தொட்டி, தண்ணீா் தொட்டி என 54 உள்ளன. சுட்டெரிக்கும் கோடை வெயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனவிலங்குகள் கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதைத் தடுக்கும் பொருட்டும், அவற்றின் தாகத்தை தணிக்கும் விதமாகவும் அனைத்து குட்டைகள், தொட்டிகளையும் தண்ணீா் நிரப்பி வைக்கும்படி வனச் சரகா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, குட்டைகள், தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது. குட்டைகளில் தண்ணீா் உள்ளதா என்று அவற்றை அடிக்கடி கண்காணிக்கும்படி வனச் சரகா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனா்.