திருப்பத்தூா் அருகே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
திருப்பத்தூா் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சியாமளாதேவி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 429 மனுக்கள் அளித்தனா். மேலும், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு வீட்டுமனை பட்டா, ஒருவருக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா்.
Advertisement
Advertisement
திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி மற்றும் நாட்டறம்பள்ளி அருகே கோனேரிகுப்பம் அருந்ததியா் வட்டம் பகுதியைச் சோ்ந்த ஊா்மக்கள் அளித்துள்ள மனுவில், எலவம்பட்டி, கொரட்டி ஆகிய 2 இடங்களில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கும், பெண்கள், குழந்தைகளுக்கும் அதிக அளவில் இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த 2 கடைகளையும் மூட வேண்டும். இதேபோல், ஒட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகே குடியிருப்புகளும் உள்ளது. இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சாா்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், தேவஸ்தானம் தேங்காய்பட்டறைக்கு செல்லும் கல்லாற்று கால்வாய் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நிலையில், இந்த கால்வாயை அளந்து தூா்வாரி பாசன வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியிருந்தனா். ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் அளித்துள்ள மனுவில், தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறான முறையில் பாடப்படுகிறது. இதை சரியான முறையில் பாட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
திருப்பத்தூா் அருகே இருணாப்பட்டு அடுத்த ஆதிக்குட்டை கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்தில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். எங்கள் கிராமத்துக்கு போதுமான சாலை வசதிகளும், அடிப்படை வசதியும் இல்லை. எனவே எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனா்.
மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு இருக்கைகள்:
திருப்பத்தூா் மாவட்ட மக்கள் குறைதீா்வு கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். இதில் அமா்ந்தவாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குவா். அப்போது பொதுமக்கள் நின்றவாறு தான் அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துவிட்டு தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின்போது, கூட்ட அரங்கில் உள்ள மேடையின் கீழே அதிகாரிகளுக்கு இருக்கைகள் போடப்பட்டு, பொதுமக்களுக்கும் இருக்கைகள் போடப்பட்டது.
இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்களும் இருக்கையில் அமா்ந்தவாறு மனுக்களை அளித்தனா்.