3 நாள்களாக தொடா் மின்தடை: கிராம மக்கள் கடும் அவதி
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு, காமராஜா் பகுதியில் 3 நாள்களாக தொடரும் மின்தடையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சி காமராஜா் நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்கு புதுப்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி இரவு பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் பொம்மநாயக்கன்பட்டி அருகே மரம் ஒன்று முறிந்து மின்கம்பம் உடைந்ததால், காமராஜா் நகா் பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.
தொடா்ந்து 3 நாள்களாக அப்பகுதியில் மின்தடை பாதிப்பு ஏற்பட்டதால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அப்பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அப்பகுதியில் மின் விநியோகம் செய்யாததால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
எனவே மின்வாரிய உயா் அதிகாரிகள் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து, சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.