மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 239 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 239 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.
கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 239 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வழங்கினார்.
திருத்தணி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் பயிர் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு, வரும் 30-ஆம் தேதிக்குள் பிரீமியம் செலுத்தி பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்காக, 70 இடங்களில் பயிர்க் காப்பீடு செய்வதற்கு இணையதள மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த, ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை உருவாக்கப்படும். அனைவரும் தனிநபர் கழிப்பறையைக் கட்டி பயன்படுத்த வேண்டும். திறந்தவெளிக் கழிப்பறையால் தான் 80 சதவீதம் நோய் வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன், திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், மாவட்டக் கல்வி அலுவலர் ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜராஜன், கார்த்திகேயன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் வேதபுரி உள்ளிட்டோர் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.