தொழிற்சாலை விபத்து: 4 பேருக்கு தீக்காயம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காமாட்சி அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காமாட்சி அனல் மின் நிலைய கொதிகலன் குழாய் வெடித்ததில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பாத்தபாளையம் பகுதியில் காமாட்சி அனல் மின் நிலையம் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை தொழிற்சாலையின் கொதிகலனின் இணைப்புக் குழாயில் சிறிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்த சுடுமணல் தெறித்துச் சிதறியது.
அப்போது கொதிகலன் அருகே வேலை பார்த்து வந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். இதில், வடமாநில தொழிலாளிகளான பல்ராம் (25), சுபம்(25), டியூவாஷ்(25), சுந்தர்சிங்(21) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் கவரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.