அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இருதய நோய் சிகிச்சை முகாம்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், இருதய நோய் கண்டறியும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில், இருதய நோய் கண்டறியும் முகாமில் 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு இருதய நோய் கண்டறியும் வகையில், தமிழக அரசும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மனநிலை, இருதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக சிகிச்சை அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் இருதய சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சேகர் தலைமை வகித்தார்.
அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பாஸ்கர் ரெட்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்களுக்கு சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இதில் அப்பல்லோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் சத்தியபிரகாஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டு, சிகிகிச்சை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், 2 ஆண்டு ஒப்பந்தத்தின்படி, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 9.30 முதல் 11 மணி வரையில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கும், 11.30 மணி முதல் ஒரு மணி வரையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இருதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கெளரிசங்கர், அரசு மருத்துவமனையின் தொற்றா நோய் தடுப்புத் திட்ட மருத்துவர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.