காணாமல் போகும் இளம்பெண்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளும், தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் இளம் பெண்களும் அடிக்கடி மாயமாகும் சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளும், தனியார் நிறுவனங்களில் பணிக்குச் செல்லும் இளம் பெண்களும் அடிக்கடி மாயமாகும் சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசனின் மகள் சாருலதா(19). பாலிடெக்னிக்கில் பட்டயம் முடித்து விட்டு கடந்த சில மாதங்களாக குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றார். அதைத் தொடர்ந்து நீண்ட
நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து உற்றார் உறவினர் வீடுகளிலும் தேடியும் எங்கும் கிடைக்கவில்லையாம். இதுதொடர்பாக சீனிவாசன் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதேபோல், திருத்தணியை அடுத்த சின்ன கடம்பூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபுவின் மகள் தேவி(27). இவர் கடந்த 22-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
திருத்தணியைச் சேர்ந்தவர் சுபாஷினி (18). இவர் திருத்தணியில் உள்ள தமிழ்நாடு பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கல்லூரிக்குச் செல்வதாக கூறிச் சென்ற இவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
கனகம்மாசத்திரத்தை அடுத்த தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (22). திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 24-ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இச்சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ளனர். இது
தொடர்பாக காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாயமாகும் இளம் பெண்கள் காதல் வயப்பட்டுச் சென்றார்களா அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றுள்ளார்களா என பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து, பிடித்த கல்லூரிகளில் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர். ஆனாலும், பெற்றோர் அனுமதியின்றி திருமணம் முடிக்கும் நோக்கத்துடன் சில பெண்கள் வெளியேறிச் செல்கின்றனர். இதுபோன்று காணாமல் போகும் பெண்களால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பீதி அடைய வேண்டாம்: எஸ்.பி.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் இளம்பெண்கள் மாயமாவதாக இணைய தளங்களில் அவதூறு பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டில் அதிகளவில் இளம்பெண்கள் காணா மல் போவதாகவும், மாயமாகி வரு வதாகவும் கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அவதூறு பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இதில் கடந்த ஜனவரி முதல் இதுவரை திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் இளம்பெண்கள் காணாமல் போனதாக மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 34 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன.
நிலுவையில் உள்ள 6 வழக்குகளில் விரைந்து தீர்வுகாண அந்தந்தப் பகுதி துணைக் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களை இந்த வழக்குகளில் சேர்க்கக் கூடாது. இது குறித்து காவல் நிலையங்களிலேயே விசாரணை மேற்கொண்டு கண்டுபிடிப்பார்கள். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பிரத்யேகமாக காவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், காணாமல் போன இளம்பெண்களின் பெற்றோர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனை வழங்குவார்.
அதோடு, ஒவ்வொரு காவல் நிலைய எல்லையிலும் உள்ள கிராமங்களில் பொதுமக்கள்-போலீஸார் நல்லுறவுக் கூட்டம் நடத்தி அதன்மூலம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள 044- 27663555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் தவறான தகவல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார் .