ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவோரிடம் தீவிர சோதனை
ஆட்சியர் அலுவலகத்திற்குள் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பின் போலீஸார் அனுமதிக்கின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்குள் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பின் போலீஸார் அனுமதிக்கின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு வேலைகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்று வரும் சிலர் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மண்ணெண்ணெயை மேலே ஊற்றிக் கொள்ளுதல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் வழியில், பொதுமக்கள் எதுவும் பைகளில் எரிபொருள்களை எடுத்துச் செல்கிறார்களா என்பதைச் சோதனை செய்த பின்னரே போலீஸார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
அதேபோல், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் குறிப்பிட்ட வழியாக மட்டுமே செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியிலும், அலுவலக வளாகத்திற்குள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.