கோயில் பாதையில் ஆக்கிரமிப்புகள்: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்
திருவள்ளூர் அருகே, கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அருகே, கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
புட்லூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலமும், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலமும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகின்றனர்.
இதனால், கோயிலுக்குச் செல்லும் பாதை எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்வோரும் இதே பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்குச் செல்லும் பாதையில் இடையூறாக இருபுறமும் பலர் ஆக்கிரமிப்புச் செய்து கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதனால், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், தொழிற்சாலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால், இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.