உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டும்: அமைச்சர் பெஞ்சமின்
எவ்வித பிரச்னையின்றி வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் அடுத்து வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவினர் எதிர்கொள்ளத் தயாராக
எவ்வித பிரச்னையின்றி வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் அடுத்து வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவினர் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தெரிவித்தார்.
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் எஸ்.ஜீவாசுப்பிரமணி, பி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின் பேசியதாவது: அதிமுகவில் எளிய தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்து தந்துள்ளார். அந்த வகையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்.
அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு கிளையிலும் சிறப்பாக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.மணிமாறன், மாநில சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜாவித் அகமத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் புட்லூர் ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வேப்பம்பட்டு ஊராட்சி செயலாளர் கோசலராமன் நன்றி கூறினார்.