விபூதி  தயார்  செய்ய  வறட்டியைப்  பதப்படுத்தும்  பணியில்  ஈடுபட்டுள்ள  பெண்  தொழிலாளர்கள். 
திருவள்ளூர்

பசுக்களின் சாணம், கோமியம் மூலம் பல்பொடி, சோப்பு தயாரிப்பு !: பூண்டி அருகே பெண் சாதனை

திருவள்ளூரை அடுத்த பூண்டி-மைலாப்பூரில் பசு மற்றும் காளை மாடுகளை கோசாலையில் வளர்த்து அவற்றின் கழிவுகளான சாணம், கோமியம் ஆகியவற்றில் இருந்து மருத்துவ குணமுள்ள பல்பொடி, சோப்பு, பினாயில்

எஸ். பாண்டியன்


திருவள்ளூரை அடுத்த பூண்டி-மைலாப்பூரில் பசு மற்றும் காளை மாடுகளை கோசாலையில் வளர்த்து அவற்றின் கழிவுகளான சாணம், கோமியம் ஆகியவற்றில் இருந்து மருத்துவ குணமுள்ள பல்பொடி, சோப்பு, பினாயில் போன்ற பல்வேறு பொருள்களை பெண் ஒருவர் தயாரித்து வருகிறார். 

பசு மாடுகளின் அவயங்களில் அனைத்து கடவுள்களும் அடங்கியுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பசுமாடுகளை வழிபடுவது அனைத்து கடவுள்களையும் வழிபாடு செய்வதற்கு இணையாகும் என பசுக்களைப் போற்றி வருகின்றனர். ஆனால், பொதுவாக பால் வற்றிய பசுக்கள், வேலை செய்ய முடியாத வயதான காளை மாடுகள், எருதுகள் போன்றவற்றிற்கு தீவனம் போட்டு வளர்க்க முடியாதோர் அவற்றை அடிமாடாக அனுப்புகின்றனர். 

அதேசமயம், இதுபோன்ற அடிமாடுகளை வைத்து ஏராளமான பயன்களைப் பெற முடியும் என நிருபணம் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. இவர், திருவள்ளூர் அருகே பூண்டியை அடுத்துள்ள மைலாப்பூரில் கோகுலகிருஷ்ணா கோசாலையை நடத்தி வருகிறார். 

இங்கு 200-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள பசுக்களின் கழிவுகளில் இருந்து ரசாயனப் பொருள்கள் சேர்க்காமல், திருநீறு, ஆரோக்கிய பல்பொடி, மரத்தூள் சேர்க்காத சாம்பிராணி, பினாயில் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் பலவற்றை தயாரித்து வருகின்றனர். 

மேலும், பசுஞ் சாணத்தை சுத்தப்படுத்தி, அச்சில் வைத்து யாக சாலைக்கான வறட்டியும் தயார் செய்து வருகின்றனர். இதையறிந்து, இப்பொருள்கள் செய்வதைக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் வருவோருக்கு கற்பிக்கவும் செய்கின்றனர்.

இது குறித்து கோசாலை நிர்வாகி ஸ்ரீவித்யா கூறியது: 
திருநீறு தயாரிக்க நாட்டுப் பசுஞ் சாணம்தான் உகந்தது என்பதால், கல், மண் நீக்கி சுத்தப்படுத்தி சிறு சிறு வட்ட வடிவில் வறட்டி போல் தட்டி, ஒரு வாரம் வரை வெயிலில் காய வைக்க வேண்டும். 

அதையடுத்து செங்கற்களைப் பரப்பி, அதன்மீது உமியிட்டு காயவைத்த சாணத்தை, தண்ணீரில் நனைத்து, செங்கற்கள் மீது பரப்பி, மீண்டும் உமி இட வேண்டும். 

பின்னர், பக்தியுடன் பூஜைகள், வராக ஹோமம் செய்து சூடம் ஏற்றிவிட்டு 3 நாள்கள் தீ இல்லாமல் புகைய விட வேண்டும். இதை மாதந்தோறும் பெளணர்மிக்கு முதல் நாள்தான் செய்வோம். பின்பு கெட்டியான திருநீறு கிடைக்கும். அதை நன்றாக இடித்து, நறுமணம் கூட்டுவதற்காக அதனுடன் விபூதி பச்சிலைப் பொடி, வில்வப் பொடி, பன்னீர் சேர்த்து தூளாக்கி, இரவு நேரத்தில் மூன்று நாள்கள் வரையில் பரப்பி வைத்து, நன்கு சலித்த பின்னர் பயன்படுத்த வேண்டும். 

இதில் 10 கிலோ சாணத்திற்கு ஒரு கிலோ திருநீறு கிடைக்கிறது. இதை ரூ. 600-க்கும், மூலிகை பல்பொடி 50 கிராம் ரூ.25 -க்கும் விற்பனை செய்கிறோம். 

இந்த கோசாலையை இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 மாடுகளுடன் தொடங்கினோம். இதில் பால் வற்றிய நிலையில் உள்ள பசுக்கள், வேலை செய்ய முடியாத காளைகளை அடிமாடாக அனுப்புவதைத் தவிர்த்து கடைசி வரையில் உணவு அளித்து காப்பாற்ற வேண்டும் என்பதே இக்கோசாலையின் நோக்கமாகும். 

பசுப் பாதுகாப்பு இயக்கத்தினர் மாடுகளை கண்காணித்து அடிமாடுகளை மீட்டு கோசாலைக்கு அனுப்புகின்றனர்.

தற்போது, இங்கு 200 பசுமாடுகள் உள்ளன. இங்கு பலர் அளிக்கும் நன்கொடைகள் மூலம் இதற்குத் தேவையான தீவனங்களை விளைநிலங்களில் பயிரிட்டு அளித்து பராமரிக்கிறோம். அதோடு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றின் விதைகள் மானியமாக கிடைக்கின்றன. 

பசுமாடுகளில் இருந்து கிடைக்கும் கோமியம், சாணம் ஆகியவற்றில் இருந்து திருநீறு, பல்பொடி, பஞ்சகவ்யம், ஹேர் ஆயில், முகப்பவுடர், நெய், பன்னீர், ஷாம்பு, சோப்பு, வறட்டி, சாம்பிராணி உள்பட பல்வேறு பொருள்களை தயார் செய்து விற்பனைக்கு அளித்து வருகிறோம். இதுகுறித்து தெரிந்துகொள்ள விரும்பி வருவோருக்கு இப்பொருள்களைத் தயாரிக்க பயிற்சியும் அளித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT