முகப்பு
திருவள்ளூர்

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில், தமிழக அரசு சார்பில் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 19 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் 17 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் அடங்கும்.
37 விடுதிகள்: மாணவர்களுக்கென விடுதிகள் திருவள்ளூர், பேரம்பாக்கம், கனகம்மாசத்திரம், பூண்டி, கே.ஜி.கண்டிகை, வங்கனூர், பாலாபுரம், செங்காட்டனூர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பொதட்டூர்பேட்டை, நெடியம், சுண்ணாம்புகுளம், பழவேற்காடு, பெரியபாளையம், மாதவரம், திருவொற்றியூர், ஆவடி, வெள்ளியூர், கொப்பூர், பாதிரிவேடு, மணவாள நகர், கீச்சலம், கேசவராஜகுப்பம் மற்றும் பண்ணூர் ஆகிய பகுதிகளிலும் உள்ளன. அதேபோல், மாணவிகள் விடுதிகள் திருவள்ளூர், கீழச்சேரி, திருவாலங்காடு, திருத்தணி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பொதட்டூர்பேட்டை, பழவேற்காடு ஆகிய பகுதிகளில் விடுதிகள் அமைந்துள்ளன. திருத்தணியில் அரசு கல்லூரி மாணவர் விடுதியும் இயங்கி வருகின்றன. 
தகுதி: இந்த விடுதிகளில் பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
சலுகைகள்: இவ்விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு ஆரோக்கியமான உணவும், தங்கும் இட வசதியும், எவ்வித கட்டணமும் இன்றி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் பொது அறிவினை வளர்க்கும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், நூலக புத்தகங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெரும் வகையில் சிறப்பு வழிகாட்டிகளும், 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 செட் இலவச சீருடைகள் வழங்கப்பட்டும் வருகின்றன. 
விடுதிகளில் சேர நிபந்தனைகள்: இந்த விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும், தங்களின் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு மட்டும் பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளர்கள், பெண் காப்பாளர்கள் அல்லது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலகத்திலிருந்தோ கட்டணமில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பிக்க கடைசி: பள்ளி விடுதிகளில் சேருவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு வரும் ஜூலை-15-ஆம் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அளிக்க வேண்டும். அப்போது, ஜாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கத் தேவையில்லை. ஆனால், தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் அரசின் சலுகையைப் பெற்று விடுதியில் தங்கிப் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →