அயப்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அம்பத்தூரை அடுத்துள்ள அயப்பாக்கத்தில் கால்வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அம்பத்தூரை அடுத்துள்ள அயப்பாக்கத்தில் கால்வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அயப்பாக்கம்-திருவேற்காடு பிரதான சாலையில் கால்வாய் புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்பினால், அருகில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்குச் செல்வதற்கான பாதையும் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கால்வாய்ப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையில் வருவாய்த் துறையினர் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில், 3 கடைகளை இடித்துத் தள்ளிய நிலையில், அங்கு வந்த அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்ஸாண்டர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.