திருவள்ளூர்

வள்ளலார் நகர், பிராட்வே பகுதிக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் : பொன்னேரி மக்கள் கோரிக்கை

DIN


பொன்னேரியில் இருந்து சென்னை வள்ளலார் நகர், பிராட்வே பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்து பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 70ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து கோயம்பேடு, திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவள்ளூர், பழவேற்காடு, செங்குன்றம், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போன்று மாதவரம், பேசின்பாலம், பூந்தமல்லி, ஆவடி, அண்ணாநகர் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. 
ஒவ்வொரு பேருந்தாக நிறுத்தம்....: அண்ணாநகர் பணிமனையில் இருந்து கோயம்பேடு-பொன்னேரி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த தடம் எண்: 558சி-பேருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதே போன்று, ஆவடியில் உள்ள பணிமனையில் இருந்து பட்டாபிராம்-பொன்னேரி (தடம் எண்: 536) வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த பேருந்தும் காரணம் ஏதுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 
மேலும், பேசின் பாலத்தில் உள்ள பணிமனையில் இருந்து, வள்ளலார் நகர், வியாசர்பாடி, செங்குன்றம் வழியாக பொன்னேரிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தும் (தடம் எண் 558) ஒரு வருடத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 
இரண்டு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை....: இதனால், தற்போது பொன்னேரியில் இருந்து கோயம்பேடு, வள்ளலார் நகர், பட்டாபிராம் செல்ல வேண்டும் என்றால், செங்குன்றம் சென்று அங்கிருந்து வேறு பேருந்துகளில் சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
கோயம்பேடு, பட்டாபிராம், வள்ளலார் நகர் பகுதிகளுக்கு பொன்னேரியில் இருந்து சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படாததன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொது மக்கள் சேவைக்காக இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்துகள், லாப நோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு, கிராமப் பகுதியாக உள்ள பொன்னேரிக்கு இயக்கப்படுவதில்லை என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இருந்தும் பயனில்லாத பாடியநல்லூர் பணிமனை....: செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூரில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் இருந்து பொன்னேரி-செங்குன்றம், செங்குன்றம்-பழவேற்காடு, செங்குன்றம்-மீஞ்சூர் ஆகிய வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 
பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து பொன்னேரி-கோயம்பேடு, பொன்னேரி-வள்ளலார் நகர், பொன்னேரி-அம்பத்தூர் தொழிற்பேட்டை, பொன்னேரி- கிண்டி தொழிற்பேட்டை, பொன்னேரி-தாம்பரம், பொன்னேரி பட்டாபிராம், பொன்னேரி-
பிராட்வே ஆகிய வழித்தடங்களில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT