திருவள்ளூர்

அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு: 180 பேருக்கு ஆணை வழங்கல்

DIN


மாநில அளவிலான அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 180 பேருக்கு ஆணைகளை சட்டக்கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் வழங்கினார். 
திருவள்ளூர்-திருத்தணி சாலையில் பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிகழாண்டு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இதில் இளநிலை சட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சட்டக்கல்லூரி
யின் முதல்வர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். சட்டக் கல்வித் துறை இயக்குநர் சந்தோஷ்குமார் முகாமைத் தொடங்கி வைத்தார். 
இக்கலந்தாய்வில் மாநில அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 559 பேர் கலந்து கொண்டனர். இதில், சென்னை -திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய இடங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை சட்டப்படிப்புகளில் 180 இடங்களுக்கு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் முதுநிலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதுநிலை சட்டப்படிப்பில் சேருவதற்கான ஆணைகளை சட்டக்கல்லூரி இயக்குநர் சந்தோஷ்குமார் வழங்கினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இப்படிப்புக்கு மாநில அளவில் 559 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கலந்தாய்வு முகாமில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் 180 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் சென்னை-திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட உள்ளனர். இதில், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு 4 பிரிவுகளில் தலா 20 பேரும், மற்ற 5 சட்டக் கல்லூரிகளுக்கு தலா 20 பேரும் அனுப்பப்பட உள்ளனர். 
மேலும், இக்கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டோர் தொடர்பான விவரங்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இதில், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் மட்டும் சைபர் கிரைம் என்ற சட்டப்படிப்பு கடந்தாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 20 இடங்கள் மட்டுமே உள்ள இப்படிப்புக்கு அதிகமானோர் சேர விரும்புகின்றனர். இக்கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டோர் அடுத்த வாரம் திங்கள்கிழமை கல்லூரிகளில் சேர்ந்து விடுவர். அதைத் தொடர்ந்து, வரும் 29-ஆம் தேதி முதல் முதுகலை வகுப்புகள் தொடங்கவுள்ளன என்றார். 
இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளில் பயின்று தமிழக பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக சேருவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது, தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் பயில்வோரை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அரசு சட்டக்கல்லூரிகளில் 66 முதல் 75 சதவீதம் வரை வருகைப் பதிவேட்டில் பதிவானவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கும் குறைவாக உள்ளோரை தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பயிலுவோர் அதன்படி செயல்படுவதாகவும், அதேபோல் மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை அவர்களும் வருகைப் பதிவேட்டின்படி வருவதாகக் கூறுகின்றனர். இதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கு தமிழக பார் கவுன்சிலில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஆனால், அரசு சட்டக் கல்லூரிகளில் படிப்போருக்கு இறுதியாண்டில் நீதிமன்றங்களில் நேரடிப் பயிற்சியும், இறுதியாக ஒரு மாதம் நீதிமன்றத்தில் வழக்காடுவது போல் மாதிரி நீதிமன்றமும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் பயிலுவோருக்கு தரமான சட்டக் கல்வி அளித்தல் என்பது உறுதியாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT