திருவள்ளூர்

உதவித் தொகை பெறுவதற்கு ஏராளமான நிபந்தனைகள்: விவசாயிகள் குழப்பம்

தினமணி

மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளால் அத்தொகை கிடைக்குமா? என சிறு, குறு விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
 திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் உள்ளன. இதில் தற்போது மானாவாரி மற்றும் பம்ப்செட் மூலம் 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
 இதனிடையே, இந்திய அளவில் கடும் வறட்சி போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கிராமங்கள்தோறும் அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்காக கிராமங்களில் விளைநிலங்களை வைத்திருக்கும் ஏழைகள், வசதியானோர் என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர்.
 இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் உண்மையான சிறு, குறு விவசாயிகளிடையே கவலையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இத்தொகையைப் பெற தகுதி கிடையாது; சிறு, குறு விவசாயிகளின் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்; அரசு ஊழியர்கள், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் வறட்சி நிவாரண நிதி பெற தகுதியற்றவர்கள் உள்ளிட்ட நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், வருவாய்த் துறையிடம் கட்டாயமாக பட்டா, சிட்டா அடங்கல், கையடக்க குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதுவரை கிராமங்களில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில் பலர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யாமலேயே இருந்து வருகின்றனர். அவர்களில் சில விவசாயிகள் உயிரிழந்த நிலையில் அவர்களின் வாரிசுகளின் பற்றிய விவரங்கள் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே உள்ளன. இதுபோன்ற காரணங்களால் சிறு, குறு விவசாயிகள் மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடு குறித்தும் எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 அதனால் கிராமங்களில் வறட்சி குறித்து வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை இணைந்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு சில கிராமங்கள் தவிர மற்ற கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மேலும் பல இடங்களில் வறட்சி குறித்து வருவாய்த் துறையினர் முறையாகப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பயன்படுத்தி விவசாயிகளின் பெயரைப் பதிவு செய்வதற்கு வருவாய்த் துறையினர் முறைகேடு செய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் விவசாய சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
 விவசாய நில ஆவணங்களின் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளைக் கண்டறிந்து முறைகேடுகளுக்கு வழியின்றி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும் திட்டம் இது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உதவித் தொகையைப் பெற சிறு, குறு விவசாயிகள் யாரையும் விட்டுவிடாமல் கணக்கெடுப்பு நடத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் 10 சென்ட் விளைநிலம் முதல் 5 ஏக்கர் வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத 10 சென்ட் வீட்டடி நிலம் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
 எனவே, "இதுபோன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு வறட்சி நிவாரணத்தொகை பெற ஆவணங்களை அளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும்; அல்லது கிராம நிர்வாக அதிகாரிகளின் பதிவேடுகளில் உள்ளபட்டா விவரங்களின் அடிப்படையில் 5 ஏக்கருக்குள் உள்ள சிறு விவசாயிகளின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து, அவர்களை நேரில் சந்தித்தோ அல்லது சிறப்பு முகாம் நடத்தியோ உதவித் தொகைக்கான விண்ணப்பங்களைப் பெறுவதன் மூலம் அவர்களின் உண்மை நிலவரம் தெரிய வருவதற்கான வாய்ப்புள்ளது' என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT