அலுமினிய உருக்கு ஆலை முற்றுகை
செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செங்குன்றம் அருகே உள்ள அலுமினியம் உருக்கு ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் தனியார் அலுமினிய உருக்கு ஆலை இயங்கி வருகிறது. இங்கு பழைய அலுமினியப் பொருள்களை வாங்கி வந்து உருக்கி, புதிய அலுமினிய கட்டிகளாக தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆலையால் ஏற்படும் மாசு அருகில் உள்ள குடியிருப்புகளை பாழ்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அலுமினிய உருக்கு ஆலையை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி, அந்த ஆலையை மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.