ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைப் பற்றி...
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்த கையோடு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இரண்டாக உடைந்தது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை தங்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து, கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று (மே 25) சந்தித்துப் பேசியிருந்தனர்.
இந்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பைச் சேர்ந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மூன்று பேரும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வழங்கினர்.
எம்.எல்.ஏ.க்கள் மூவரும் முறைப்படி ராஜிநாமா கடிதம் அளித்துள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் மூவரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்து, இவர்கள் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்களில் பலம் 44 ஆகக் குறைந்துள்ளது.
ஏற்கனெவே, எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குத் தாவிய நிலையில், பழனிசாமிக்கு ஆதரவாக 27 எம்.எல்.ஏக்களும், எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு ஆதரவாக 17 எம்.எல்.ஏக்களும், வேலுமணி தரப்பில் இருந்து மூன்று பேர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கும் தாவியுள்ளனர். இதனால், சட்டப்பேரவையிலேயே அதிமுக மூன்றாக உடைந்துள்ளது.
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மூவரும், திருச்சி கிழக்குத் தொகுதியுடன் சேர்த்து நடைபெறும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Three AIADMK MLAs resigned from their posts and immediately joined the Tamilaga Vettri Kazhagam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.