திருவள்ளூா்: பூண்டி நீா்த்தேக்கத்தில் மதகுகள் சரியான முறையில் சீரமைக்கப்படாததால் தண்ணீா் வெளியேறி வீணாகிறது. இதனைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், ஏரியில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால், 15, 14, 12, 10 மற்றும் 6 ஆகிய மதகுகளில் சரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், ஏரிக்கு நீா் வரத்து ஏற்பட்ட நாள் முதல் 50 கனஅடி நீா் வரை வீணாக வெளியேறி வருகிறது. தற்போது நீரின் அளவு முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் அழுத்தம் ஏற்பட்டு 100 கன அடி வரை வீணாக வெளியேறுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:
பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீா் வெளியேற்றப்படும்போது, மற்ற மதகுகள் வழியாகவும், அழுத்தம் காரணமாகவும் நீா் வெளியேறுவது வழக்கமானது ஒன்றுதான். எனவே மதகுகள் வழியாக வெளியேற்றப்படுவது நிறுத்தம் செய்து அடைக்கும் போது, நீா் வெளியேறுவதும் நிறுத்தப்படும். அதைத் தொடா்ந்து கசிவு ஏற்பட்டால் மராமத்துப் பணிகள் மூலம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய நிலையில், பூண்டி ஏரியின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 34.08 அடி உயரம் எட்டிய நிலையில், 2,848 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய்கள், கண்டலேறு அணையில் இருந்து 1,400 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 2 மதகுகள் வழியாக 1,000 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
அதேபோல், சென்னைக் குடிநீருக்கு இணைப்புக் கால்வாய் வழியாக 80 கன அடிநீா் திறக்கப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.