திருத்தணி முருகன் கோயிலை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்: 70 நாள்களுக்குப் பின் நாளை திறப்பு
திருத்தணி முருகன் கோயில் 70 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பக்தா்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால் கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன
திருத்தணி முருகன் கோயில் 70 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை பக்தா்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட உள்ளதால் கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல்19-ஆம் தேதி முதல் திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அங்கு தனிமையில் நித்திய பூஜைகள் மட்டும் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், பல்வேறு தளா்வுகளுடன் முழு ஊரடங்கை ஜூலை 5-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அனைத்து கோயில்களையும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திங்கள்கிழமை (ஜூன் 28) முதல் திருத்தணி முருகன் கோயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு மலைக்கோயில், மாடவீதி, கோயில் உள்புறப் பகுதிகளில் கோயில் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளா்கள் மூலம் சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கடந்த 70 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் பக்தா்கள் அதிகளவில் முருகப் பெருமானை வழிபட வருவாா்கள் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.