முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

உரிமையின் புரிதல் தேர்தல்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறுவது தேர்தல் ஆணையத்தின் பங்கு என்பதைவிட, ஒவ்வோர் குடிமகனின் பொறுப்பு.

Updated On : 21 மார்ச், 2026 at 1:45 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறுவது தேர்தல் ஆணையத்தின் பங்கு என்பதைவிட, ஒவ்வோர் குடிமகனின் பொறுப்பு. தமிழகம் எப்போதும் அறிவும், அரசியல் விழிப்புணர்வும் கொண்ட மாநிலமாக அறியப்படுகிறது. கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு. ஆனால், அந்த வேறுபாடுகள் வன்முறையாக மாறாமல், ஜனநாயக முறையில் வெளிப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கொள்கை, சாதனை, எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை மக்கள் முன்பாக வைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் இழிவுபடுத்துதல், தூண்டுதல், சண்டை ஆகியவற்றை மறந்துவிட வேண்டும். ஒழுக்கம் என்னும் கவசம் நம்முடைய உயர்வுக்கு வழிவகுக்கும்.

தேர்தல் என்பது உரிமையின் புரிதல் என்ற அடிப்படையில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும். தேர்தல் பிரசாரங்களில், மொழி நாகரிகமாக இருக்க வேண்டும். மக்களுக்கான சேவை போன்ற உணர்வு இருக்க வேண்டும். சமூக வலைதளங்களும் தவறான செய்தி, வதந்தி, வெறுப்பைத் தூண்டும் பதிவுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். வெற்றியை பணிவுடன் ஏற்றுக் கொள்வதும், தோல்வியை முதிர்ச்சியுடன் எதிர்கொள்வதும் அரசியல் பண்பாட்டின் உயர்வைக் காட்டும் என்பதை அரசியல்வாதிகளும், தொண்டர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

கலாசாரம், சமூக அமைப்பு, மொழி, வரலாறு ஆகியவை தமிழக அரசியலில் மிகவும் தனித்துவமானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. இன்றைய அரசியல் சூழலில், புதிய கட்சிகள் தங்களது கருத்துகளை விரைவாக மக்களிடம் கொண்டு செல்ல சமூக ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அந்தப் பங்கும், ஆதரவு மட்டும் போதாது. நேரடித் தொடர்பு மிகவும் முக்கியமானது.

புதிய கட்சி தொடங்கி, ஒரே தேர்தலில் முதல்வராக முடியுமா என்பது மக்களிடம் எழும் ஒரு பொதுவான கேள்வியாகும். ஆனால், கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் இது சாத்தியம் என்று நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது வேறு.

தமிழக அரசியலில் புதிதாக உள்ளே நுழைபவர்கள் முதல்வர் என்ற அடையாளத்தை உடனே உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதை வரலாறுகள் நமக்குச் சொல்கின்றன. நடிகர்கள் கட்சித் தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அந்தக் கட்சியை கடைசி வரைக்கும் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் அடித்தளமாக இருப்பதற்கு நிலையான அமைப்பும், நேர்மையான அரசியலும் கண்டிப்பாக வேண்டும். இதை உடனே ஏற்படுத்திக் கொள்ளவும் முடியாது. அதைச் செயல்படுத்துவதற்கு பக்குவம், காலம், கொள்கை, வாக்கு சதவீதம் போன்றவை கண்டிப்பாக நமக்கு உருவாக வேண்டும்.

தமிழக அரசியலில் பல நேரங்களில் கூட்டணி அரசியல் முக்கியப் பங்கு வகித்துள்ளது. சிறிய, அல்லது புதிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு, படிப்படியாக தங்களது ஆதரவை வளர்த்துக் கொண்டுள்ளன. தமிழகத்தில் இதற்கு முன்பும், சில புதிய கட்சிகள் உருவாகியுள்ளன. சில கட்சிகள் தொடக்கத்தில் பெரிய ஆதரவைப் பெற்றாலும், தொடர்ந்து வளர்ச்சி அடையவில்லை. காரணம் வலுவான அமைப்பு, அரசியல் திட்டமிடல் இல்லாததுதான்.

மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாக வேண்டும் என்றால், அந்தக் கட்சி தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்; பிரச்னைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல், அனைத்துக் காலங்களிலும் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும்.

இதைவிட, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அட்டவணையின்படி வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் போன்ற கட்டங்கள் மிக முக்கியமானவை. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றால், கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து அவர்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பெரும் தொய்வு ஏற்படும்.

அரசியல் என்பது பல்வேறு சாத்தியங்களின் களமாகும். எனவே, எந்த முடிவாக இருந்தாலும், அது தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும். வேட்பாளர் தேர்வு என்பது தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியாகும். ஒரு தொகுதியின் சமூக அமைப்பு, வாக்காளர் மனநிலை, உள்ளுர் பிரச்னை, கட்சியின் நிலை போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இது துல்லியமானதாக இருக்க வேண்டியதால், அதைக் கடைசி நேரத்தில் செய்ய முயற்சிப்பது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

மேலும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, அவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, தேர்தல் பிரசாரத் திட்டங்களை வகுப்பது போன்ற அனைத்துப் பணிகளுக்கும் நேரம் ஒதுக்குவது கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளின் தொண்டர்களின் மனநிலையும் கவனிக்கப்பட வேண்டும்.

ஒரு தொகுதியில் எந்தக் கட்சி போட்டி, யார் வேட்பாளர் என்பதில் தெளிவு இல்லாத நிலை நீடித்தால், அடிப்படை அமைப்புகளில் குழப்பம் உருவாகும். அந்தக் குழப்பம் தேர்தல் பணிகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தேர்தல் என்பது வெறும் வாக்கு சேகரிப்பின் முறை மட்டுமல்ல; திட்டமிட்ட அரசியல் மேலாண்மை, நேர்மையான முடிவு, துல்லியமான கால நிர்வாகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும். அந்த வகையில், தற்போது நிலவும் சூழ்நிலை அனைத்து அரசியல் கட்சிகளையும் விரைவான, தெளிவான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.