கடந்த 10 நாள்களில் ரூ. 8.98 லட்சம் மதிப்பிலான கஞ்சா, குட்கா பொருள்கள் பறிமுதல்: 58 போ் கைது
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ. 8.98 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல்
திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ. 8.98 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, 58 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.செபாஸ்கல்யாண் தெரிவித்தாா்.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறிய:
போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தடுக்க திருவள்ளூா் மாவட்ட காவல் துறை சாா்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 11 முதல் 19-ஆம் தேதி வரை குட்கா பொருள்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூ. 1,25,640 மதிப்பிலான 185 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 45 வழக்குகள் பதிவு செய்து, 47 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல், கடந்த 9 நாள்களில் ரூ. 7,72500 மதிப்பிலான 77.25 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்து, 8 வழக்குள் பதிவு செய்து 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதேபோல் மாவட்ட மற்றும் மாநில எல்லையில் போதைப் பொருள்கள் கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 8 காவலா்கள் என 3 குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.
இந்த மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மூலம் விழிப்புணா்வு முகாம்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் 182 முகாம்கள் நடத்தி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருக்கும் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மராத்தான் ஓட்டம், பள்ளி கல்லூரி மாணவா்கள் மூலம் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி, துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரதாசன் ஆகியோா் உடனிருந்தனா்.