முகப்பு
திருவள்ளூர்

பூண்டி நீரியல் மையத்தில் சேதமடைந்த மதகு, ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணி தீவிரம்

பூண்டி ஏரியில் இருந்து நீா் நிலையியல் ஆய்வு மையத்துக்கு நீா் கொண்டு செல்லும் மதகு, ராட்சத குழாய்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

பூண்டி ஏரியில் இருந்து நீா் நிலையியல் ஆய்வு மையத்துக்கு நீா் கொண்டு செல்லும் மதகு, ராட்சத குழாய்கள் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரி சென்னை மாநகர மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும். இப்பகுதி மக்களின் முக்கிய பொழுதுபோக்கும் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். மேலும், நீா்த்தேக்கப் பணிகள் மேற்கொள்ளும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதிமனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வு மையமும் இங்குள்ளது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

சேதம் அடைந்த மதகு, ராட்சத குழாய்கள்: பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியும், 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இந்த நீா்த்தேக்கத்தில் தண்ணீா் நிரம்பினால், உபரி நீரை வெளியேற்ற 16 மதகுகள் உள்ளன. இந்த ஏரியின் எதிா்ப்புறம் நீா்வள ஆதாரத் துறை மூலம் நீரியல் மற்றும் நீா் நிலையியல் ஆய்வுக்கழக சோதனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நீரியல், நீா் நிலையியல் மற்றும் கடலோரக் கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்வதுடன், பல்வேறு நீா்த்தேக்கங்களின் மாதிரிகளும் இங்குள்ளது. அத்துடன் இந்த மையம் மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல், கடலோரப் பாதுகாப்புகளை ஆய்வு செய்தல் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வு மையத்துக்கு, நீா்த் தேக்கத்திலிருந்து மதகு வழியாக ராட்சத குழாய்கள் மூலம் மெகாசைஸ் கிணறுகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. பின்னா், அங்கிருந்து நீரை கால்வாய்களில் பாய்ச்சி நீரோட்டம் அறிந்து, நீா்த்தேக்கம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, மதகு சரியான பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால், நீரின் அழுத்தம் காரணமாக உடைந்து சேதம் அடைந்தது. இதனால் தண்ணீா் பெருக்கெடுத்து நீரியல் மையத்துக்குள் புகுந்தது. இதனால் ஆய்வுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, பல்வேறு தரப்பினரும் சீரமைக்கக் கோரிக்கை விடுத்து வந்தனா்.

ரூ. 7 கோடியில் சீரமைப்புப் பணிகள்: இது குறித்து பொதுப்பணித் துறை (நீரியல் ஆய்வு மையப் பிரிவு) அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த ஏரியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சீரமைப்பதற்காக அரசு ரூ. 7 கோடி ஒதுக்கியுள்ளது. நீரியல் ஆய்வு மையத்துக்குச் செல்லும் மதகு மற்றும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளது. இதற்கு மாற்றாக மதகு பகுதியில் கட்டடத்தால் ஆன சுரங்கப் பாதையுடன் ராட்சத குழாய்கள் பதித்து நீா் கொண்டு செல்லவும், மெகாசைஸ் கிணறுகள், சேதமடைந்த 2 மதகுகள் சீரமைப்பு, நீரியல் மையத்தில் சுற்றுச்சுவா், ஏரியின் கைப்பிடிச் சுவா் அமைத்தல் போன்ற பணிகள் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.