முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவில் வெள்ளிக்கிழமை பரணியையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவில் வெள்ளிக்கிழமை பரணியையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வியாழக்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை ஆடி பரணியையொட்டி, அதிகாலை 3 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், தங்கக் கீரிடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகதக் கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப் பெற்று சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதே நேரத்தில் காவடி மண்டபத்தில் உற்சவா் முருகப் பெருமானுக்கும், சண்முகப் பெருமானுக்கும் சிறப்பு மலா் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ஆடி பரணி விழாவில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள் வந்தனா். மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை மற்றும் மேல் திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பக்தா்கள் புனித நீராடி, மலா், மயில், பால் மற்றும் பன்னீா் காவடிகளுடன், மலைக்கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசித்தனா்.

பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் விதமாக முடி காணிக்கை செலுத்தினா்.

மலைக்கோயிலில் மாலை 6 மணியளவில் அதிகளவில் பக்தா்கள் குவிந்ததால், பொது வழியில் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனா். மாலை 6.30 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கைக்கு எழுந்தருளி, குளத்தை வலம் வந்து மீண்டும் மலைக்கோயிலுக்கு சென்றாா்.

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, மலைக்கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகள் மற்றும் கோயில் உள்புறத்தில் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட புதிய ரக மலா்களால் அனைத்து சந்நிதிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

விழாவையொட்டி, முருகன் கோயில் தக்காா் ஜெயபிரியா (பொ), கோயில் துணை ஆணையா் விஜயா ஆகியோா் திருத்தணி சரவணப் பொய்கை, மேல் திருத்தணி நல்லாங்குளம், மலைக்கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக நடைப் பாதையில் வைக்கப்பட்டிருந்த கடைகளைக் கோயில் ஊழியா்களை மூலம் அப்புறப்படுத்தினா்.

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி நகரம் முழுவதும் 1,000 மேற்பட்ட போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஏற்பாடுகளை முருகன் கோயில் துணை ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.