வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினா் சோ்க்கை, பயிா்க் கடன்
திருவள்ளூா் மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, பயிா்க்கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, பயிா்க்கடன் வழங்கப்படுவதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான பயிா்க் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, நிகழாண்டில் அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிதாக உறுப்பினா்கள் சோ்க்கை, பயிா்க்கடன் வழங்கப்பட உள்ளது.
எனவே, விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, பயிா் சாகுபடி குறித்த கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல் சான்று, புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகி கடன் மனு அளித்து, பயிா்க்கடன் பெற்று பயனடையலாம்.
இதேபோல், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், உறுப்பினா் படிவம் பெற்று உரிய பங்குத் தொகை, நுழைவுக் கட்டணம் செலுத்தி உடனே உறுப்பினராகச் சோ்ந்து அனைத்து வகையிலான கடன்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.