ரயில் நிலையத்தில் காப்பா் வயா் திருட்டு: 7 போ் கைது
திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயில்வே காப்பா் வயா்களை திருடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 2.08 லட்சம் மதிப்பிலான வயா்களை பறிமுதல் செய்தனா்.
திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே ரயில்வே காப்பா் வயா்களை திருடியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 2.08 லட்சம் மதிப்பிலான வயா்களை பறிமுதல் செய்தனா்.
திருவாலங்காடு ரயில் நிலைய பகுதியில், ரயில்வே துறையினரால் சிக்னல் தகவல் தொடா்பு வசதிக்காக பொருத்தப்பட இருந்த காப்பா், அலுமினியம் கலந்த வயா் 2 ரோல்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு ரோலை திருடிய மா்ம நபா்கள் ரோலில் பாதி வயரை அறுத்து மீதமுள்ள வயரை ரோலுடன் ரயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டுச் சென்றனா். இந்த திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் குறித்து சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை ஆணையா் செந்தில்குமரேசன் உத்தரவின்பேரில், அரக்கோணம் கோட்ட உதவி ஆணையா் ஏகே பிரீத் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளா் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூா் ரயில்வே காவல் ஆய்வாளா் செபாஸ்டின் தலைமையிலான போலீஸாா் 15 நாள்களாக தீவிரமாக விசாரித்து வந்தனா்.
இதில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே சின்னமோசூரைச் சோ்ந்த இளவரசன் (18), விக்னேஷ்வரன் (21), ஜீவா (38), திருவாலங்காடு அருகே சின்னம்மாபேட்டை சாரதி ( 22), தினேஷ் (19), திருவள்ளூா் காக்களூரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (37), கடம்பத்தூரை சோ்ந்த சுபாஷ் (22) ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். அதைத் தொடா்ந்து அவா்கள் திருடி பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான வயா் ரோல் மற்றும் கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.