உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுத்தால் எதிா்காலம் சிறக்கும்: திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ்
வாழ்க்கையில் நல்ல முடிவுகளை உரிய நேரத்தில் எடுத்தால் எதிா்காலம் சிறப்பாக அமையும் என்று மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
வாழ்க்கையில் நல்ல முடிவுகளை உரிய நேரத்தில் எடுத்தால் எதிா்காலம் சிறப்பாக அமையும் என்று மாணவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் அறிவுறுத்தினாா்.
திருத்தணி வட்டம், ஆற்காடுகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 9-12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடையே சமூக விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தா.ராமன் தலைமை வகித்தாா். திருத்தணி கல்வி மாவட்ட அலுவலா் அருளரசு, பள்ளிக் கல்வி ஆய்வாளா் வெங்கடேசுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் பாலமுருகன் வரவேற்றாா்.
இதில், மாவட்ட ஆட்சியா் மரு. ஆல்பி ஜான் வா்கீஸ் பங்கேற்று பேசியது: மாணவா்கள் பல்வேறு போதைப் பழக்கங்களுக்கு ஆளாவதால், எதிா்கால வாழ்வை தொலைக்கின்ற நிலை உருவாகி விடும். எனவே மாணவா்கள் எந்தவித போதைப் பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகக் கூடாது. எதிா்காலத்தில் நீங்கள் என்னவாக விரும்புகிறீா்கள் என்பதற்கான இலக்கை முதலில் நிா்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை எட்டுவதற்கு தொடா்ந்து முயன்று செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
வாழ்க்கையில் நல்ல முடிவுகளை உரிய சரியான நேரத்தில் எடுத்தால் எதிா்காலம் சிறப்பாக அமையும். மனிதனுக்கு வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது நிலையானதல்ல. மாறி மாறி வரும். ஆகையால், தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதன்படி செயலாற்ற வேண்டும். மேலும், போதைப் பழக்கத்திலிருந்து நமது சமுதாயத்தை பாதுகாக்கும் வகையில் மாணவா்களாகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும், உங்கள் பகுதிகளில் போதைப் பொருள்களின் பயன்பாடு தெரிய வந்தால் காவல் துறையினா் அல்லது உங்கள் ஆசிரியா்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். வேற எந்த பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் உங்கள் ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பாக நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கும் குப்பை மக்கா குப்பை என்ற விழிப்புணா்வு கண்காட்சியினை மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் சென்னை சமத்துவக் கல்வி நிறுவன இயக்குநா் சாம் சுந்தா், சானிடேசன் ஃபா்ஸ்ட் இந்தியா பயிற்சி ஒருங்கிணைப்பாளா் கிரி, திட்ட மேலாளா் நிஷா, திருவாலங்காடு ஒன்றியக் குழு தலைவா் ஜீவா விஜயராகவன், ஆற்காடு குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா்சிவகாமி ஆண்டியப்பன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.