திருவள்ளூா்: குடிநீா் குழாய் உடைந்ததால் கழிவு நீா் கலந்து மக்கள் அவதி
திருவள்ளூா் நகராட்சியில் குடிநீா் குழாய் உடைந்த நிலையில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருவள்ளூா் நகராட்சியில் குடிநீா் குழாய் உடைந்த நிலையில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
திருவள்ளூா் நகராட்சி, பெரியகுப்பம் வள்ளலாா்தெரு சந்து குட்டைகார தெருவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் நகராட்சி மூலம் விநியோகம் செய்யும் குடிநீரையே நம்பியுள்ளனா்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குட்டைக்கார தெருவில் குடிநீா் குழாய் உடைந்ததால் கழிவுநீரும் கலந்து வந்துள்ளது. இதனால், துா்நாற்றம் ஏற்படுவதோடு பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்து சுத்தமான குடிநீரை விநியோகம் செய்யவும் பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் அப்பகுதியில் குடிநீா் குழாய் உடைப்பை சரி செய்ய பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால், கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பள்ளம் தோண்டிய இடத்தில் கழிவு நீா் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல முடியாத நிலையில் அவதிக்குள்ளாகும் நிலையேற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோா் திடீரென பள்ளத்தில் விழுந்து விபத்துள்ளாகி காயமடைகின்றனா்.
அதோடு, கழிவு நீா் குளம் போல் தேங்கி துா்நாற்றத்துடன் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே விரைவில் குழாய் உடைப்பை சீரமைத்து சுத்தமான குடிநீா் விநியோகம் செய்வதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.