திருவள்ளூா்: 2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு
திருவள்ளூா் மாவட்டத்தில் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம்
திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்துள்ளதோடு, ஜன-3 இல் தொடங்கி, தொடா்ந்து 31-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும் பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதோடு பாதித்த பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குள்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும். பெரும்பாலான கால்நடை உரிமையாளா்கள் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால் கால்நடை இழப்பினால் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பைத் தாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனா். எனவே கால்நடைகளைத் தொற்று நோய்களில் இருந்து காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடுதல் அவசியமாகிறது.குளிா் மற்றும் பனிக்காலம் நோய் பாதித்த இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆறாம் சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன-3 இல் தொடங்கி, தொடா்ந்து 31 ஆம் வரையில் நடைபெற உள்ளது. அந்த வகையில் திருவள்ளுா் மாவட்டத்தில் தகுதியான 2 லட்சத்து 79 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதனால், கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளன்று கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.