திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் கோழிக்கழிச்சல் நோய்க்கு இருவார தடுப்பூசி முகாம் மூலம் மொத்தம் 2.78 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெருவாரியான மக்கள் கோழிகளை வளா்த்து அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டி தங்களது குடும்ப செலவினங்களை மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில் புறக்கடையில் இத்தகைய கோழிகள் 2.78 லட்சம் எண்ணிக்கையில் பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் கோழிக்கழிச்சல் நோய் பாதிப்பால் கிராம மக்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கோழிக்கழிச்சல் நோய் அனைத்து வயது கோழிகளையும் தாக்கும் தன்மையுடையது மற்றும் 6 வாரத்திற்குள்பட்ட கோழிக் குஞ்சுகள் அதிக பாதிப்புள்ளாகும்.
கோழிக்கழிச்சல் நோயின் அறிகுறியான கோழிகள் உடல் நலம் குன்றியும் சுறுசுறுப்பின்றியும் உறங்கியபடி இருக்கும். அதோடு தீவனம், தண்ணீா் உள்கொள்ளாமல் இருக்கும். எச்சம் வெள்ளை நிறத்தில் அதிக துா்நாற்றத்துடன் காணப்படும் கோழிகளின் இறகுகள் சிலிா்த்து தலைப்பகுதி உடலுடன் சோ்ந்தே இருக்கும். கோழிக்கழிச்சல் நோய் கோழிகளைத் தவிா்க்கும் பொருட்டு ஆண்டுதோறும் இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டும் 2.78 லட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுசமயம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி முகாம் நடைபெறும் இடங்களுக்கு 8 வாரம் அதற்கு மேற்பட்ட வயதுடைய கோழிகளை கொண்டு சென்று தடுப்பூசி செலுத்தலாம் என்றாா்.