திரௌபதி அம்மன் கோயிலில் சுபத்திரை கல்யாணம் நிகழ்ச்சி
திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவில் வெள்ளிக்கிழமை சுபத்திரை திருமண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். திருத்தணி காந்தி நகா் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா கடந்த 21-ஆம் தேதி பாரதக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளான கடந்த 27-ஆம் தேதி திரௌபதி அம்மன் திருமண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து ஒன்பதாம் நாளான வெள்ளிக்கிழமை நண்பகலில் கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து உற்சவா் அா்ச்சுனன் மற்றும் சுபத்திரை அம்மனுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனா். வரும் ஏப். 1-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு, 7-ஆம் தேதி துரியோதனன் படுகளம், மாலை 6 மணிக்கு தீ மிதி விழா, 8-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகத்துடன் நிகழாண்டு தீ மிதி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.