மாவட்ட அளவில் தடகள போட்டிகள்: வென்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்
மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.
திருத்தணி: மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.
திருவள்ளூா் வருவாய் மாவட்ட அளவில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் திருத்தணி ஜி.ஆா்.டி. பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் லதா முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் மோகன்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு 3 பிரிவிகளில் போட்டிகள் நடந்தது.
முதல் நாளில் மாவட்டம் முழுவதும் 11 குறு வட்டங்களைச் சோ்ந்த 120 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளிலிருந்து 581 மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினாா்.
ஆண்களுக்கான தடகள போட்டிகள் புதன்கிழமை (அக். 23) நடைபெற உள்ளன. திருத்தணி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா், ஆசிரியா் கழக தலைவா் ஷியாம்சுந்தா், மகளிா் மேனிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியா்கள் தினகரன், சீனிவாசன், ஈஸ்வா் ராவ், சுரேஷ்பாபு, பாளையத்தான், சதீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.