முகப்பு
திருவள்ளூர்

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 25 ஜூன், 2025 at 2:57 AM
பகிர்:

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (42). இதற்கிடையில் இவருக்கு செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

அப்போது குமரேசன் கிரெடிட் கார்டு மூலம் வங்கி பரிவர்த்தனை செய்து, அதில் தனக்கு 2 விழுக்காடு லாபம் கிடைக்கும் என்றும், அதில் ஒரு விழுக்காடு லாபத்தை கிருஷ்ணமூர்திக்கு தருவதாகவும் கூறினாராம்.

Advertisement

இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி உள்பட 9 பேர் சேர்ந்து, தங்களது கிரெடிட் கார்டுகளை குமரேசனிடம் கொடுத்துள்ளனர்.

அவற்றை குமரேசன் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ. 1.35 கோடி பணம் பெற்றுள்ளார். அந்த பணத்துக்கு முறையாக கிரெடிட் கார்டுக்கு குமரேசன் பணம் கட்டாமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தனர். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், குமரேசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 8 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தென்னங்குடிபாளையம் கிராமத்தில் தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன ஊழியர் குமரேசனை (42) போலீஸார் திங்கள்கிழமை (ஜூன் 23) கைது செய்தனர். தொடர்ந்து அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.