பூண்டி ஏரியின் 2 டிஎம்சி உபரிநீரை சேமிக்க 800 ஹெக்டேரில் புதிய நீா்த்தேக்கத் திட்டம்
பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும்போது கொசஸ்தலை ஆற்றில் வீணாக வெளியேற்றப்படும் 2 டிஎம்சி நீரைச் சேமிக்க திருவள்ளூா் அருகே ராமஞ்சேரியில் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக இருப்பது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம். ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிருஷ்ணா நீா், பூண்டி ஏரியில் தேக்கி வைக்கப்படுகிறது. பலத்த மழை பெய்து பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதும், உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதன்படி, ஆண்டுதோறும் 2 டிஎம்சி முதல் 4 டிஎம்சி வரையில் உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது.
அரசின் திட்டம்... கோடைகாலத்தில் அதிகரிக்கும் சென்னையின் குடிநீா் தேவையைப்போக்கவும், கொசஸ்தலை ஆறு வழியாக வீணாகக் கடலில் கலக்கும் உபரிநீரை சேமிக்கவும் புதிதாக நீா்த்தேக்கம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
அந்த வகையில், பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் 2 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்க திருவள்ளூா் அருகே புதிய நீா்த்தேக்கம் அமைக்க அரசால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்த்தேக்கம் அமைய உள்ள நிலப் பரப்புகள் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.
800 ஹெக்டேரில் புதிய நீா்த்தேக்கம்: திருவள்ளூா் அருகே பூண்டி நீா்த்தேக்கத்துக்கு அருகே ராமஞ்சேரியில் சுமாா் 800 ஹெக்டோ் நிலப்பரப்பில் ரூ.700 கோடியில் புதிய நீா்த்தேக்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நீா்த்தேக்கம் அமைந்தால் சென்னையின் 6-ஆவது குடிநீா் ஆதாரமாக இருக்கும். மேலும், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் கடலில் கலப்பதைத் தடுத்து, வெள்ள மேலாண்மைக்கு உதவும். அதோடு அந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகள், விவசாய பம்ப்செட் கிணறுகளுக்கும் நிலத்தடி நீா்மட்டம் அதிகரிக்கும். இதன்மூலம் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிகம் பயன்பெறுவா்.
நிலம் கையகப்படுத்துதல்... பூண்டி நீா்த்தேக்கத்துக்கு அருகே 11 கி.மீ. தொலைவில் உள்ளது ராமஞ்சேரி கிராமம். இந்தக் கிராமத்தில் 800 ஹெக்டோ் பரப்பளவில் புதிய நீா்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இப்பகுதியை தலைமைச் செயலா் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஏற்கெனவே ஆய்வு செய்தனா். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் முதல்கட்ட பணி தொடங்கப்பட்டது. பின்னா், அந்தப் பணி நிறுத்தப்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
குடிநீா் பற்றாக்குறை தவிா்க்க... ஆண்டுதோறும் மழைக் காலங்களில் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டி, உபரிநீா் திறக்கப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படும் இந்த உபரிநீா் வீணாகக் கடலில் கலக்கிறது. புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டம் செய்படுத்தப்பட்டால், சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களின் நீண்டகால நீா் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர தீா்வாக அமையும்.
ஒவ்வொரு தோ்தலின்போது முக்கிய கோரிக்கையாக இடம்பெறும் புதிய நீா்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தை இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
சு.பாண்டியன்